×

“கொளத்தூரில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை”- திமுக

 

கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என்பதற்கான அறிவியல் மற்றும் சட்டப்பூர்வ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆய்வு செய்த 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் சரியாக வேலைசெய்யவில்லை. இது குறித்து கழகத் தலைவர் அவர்களின் அறிவுரையைப் பெற்று நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ, “கொளத்தூர் தொகுதியில் 157-வது பூத்துக்கான இயந்திரங்களை சரிபார்க்கும் போது 4 இயந்திரங்களில் இருக்க வேண்டிய 7 டேக்குகளும் புத்தம் புதிதாக, விவரங்கள் ஏதும் இல்லாமல் இருந்தன. முகவரி நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் மனிதத் தவறு என கூறுகிறார்கள். மொத்தம் 8 வாக்குப்பதிவு இயந்திரங்களில் 3 இயந்திரங்களை சரிபார்த்தபோதே குளறுபடிகள் இருந்தது உறுதியாகியுள்ளது. EVM கருவிகள் சரியாகத்தான் இயங்குகிறதா என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக, திமுக சட்டத்துறை சார்பில் வழக்குத் தொடுத்தோம். அதன்படியே தமிழ்நாடு முழுவதும் 5 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாரிக்கும் பணி நடைபெறுகிறது. ஆனால், கொளத்தூர் தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் போதே, இயந்திரக் கோளாறு என பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்?

2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை. இதன்மூலம் இந்தத் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பது தெரியவருகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக தேர்தல் அதிகாரிக்கும், வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனத்திடமும் 19 கேள்விகளை எழுப்பியுள்ளோம்.  கொளத்தூர் தொகுதியில் வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்ததில், 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பது இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்தே தெரிகிறது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசித்து, விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம்” என்றார்