பருவமழை முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 27-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ள நிலையில் முதலமைச்சர் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 27-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பல்வேறு துறையில் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கடந்த 2023-ல் ஜூன் 7-ம் தேதியும், கடந்த 2024-ல் மே 30-ம் தேதியும் பருவமழை தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு அதைவிட 4 நாட்கள் முன்னதாக தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.