×

ஈபிஎஸ்- ஐ பார்க்கவந்து ரூ.2 லட்சத்தை பறிகொடுத்த அதிமுக நிர்வாகிகள்!

 

கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட பிரச்சார சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளிடம் தலா ரூ.1 லட்சம் பிட்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபக்திரகாளியம்மன் கோவிலில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை துவங்கினார். தொடர்ந்து தேக்கம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் சூளை உரிமையாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். அப்போது நிகழ்ச்சிக்காக வந்த அதிமுக நிர்வாகிகள் வெளியே காத்திருந்தனர். அப்போது அரங்கு வெளியே நின்றுகொண்டிருந்த தேக்கம்பட்டி முன்னாள் ஊராட்சி துணைத் தலைவரும், அதிமுக ஒன்றிய பொருளாளருமான தங்கராஜ் என்பவரது கால்சட்டையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர் பிளேடால் வெட்டி பிட்பாக்கெட் அடித்து சென்றுள்ளார். 

இதே போல மற்றொரு அதிமுக நிர்வாகியாக நெல்லித்துறையை சேர்ந்த ஆனந்த் என்பவரிடமும் ரூ.1 லட்சம், அபு என்பவரிடம் ரூ.2,500 பணத்தை மர்ம நபர்கள் பிட்பாக்கெட் அடித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தங்கராஜ் உள்ளிட்டோர் மேட்டுபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதிமுக பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு வந்த அதிமுக நிர்வாகிகளிடம் பிட்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.