×

மகளின் கல்விக்காக வெறுங்காலில் ஓடி மாரத்தானில் முதலிடம் பிடித்த தாய்!

 

மஹாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தின் அம்பாஜோகாய் பகுதியை சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர். அவரது கணவர் மும்பையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க செய்ய வேண்டும் என்பது ரமாபாயின் கனவு. இதற்காக, அவரது மூத்த மகள் போட்டித் தேர்வுக்காக படிக்கும் கல்விமையத்திலேயே சமையலராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே உள்ளூர் அமைப்பு ஒன்று மாரத்தான் போட்டியை அறிவித்தது. இதில் முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. மகள்களின் கல்விக்கு உதவும் வகையில் இந்த மாரத்தானில் பங்கேற்க ரமாபாய் முடிவு செய்தார். ஆனால் அவரிடம் அதற்கான உடை ஏதும் இல்லை. ஷூக்களும் இல்லை. இதனால், சேலை அணிந்தபடி இந்த மாரத்தானில் பங்கேற்றார்.

முதலில் செருப்பு அணிந்து இருந்தாலும் போட்டி துவங்கிய சிறிது நேரத்திலேயே அதனை கழற்றிவிட்டு வெறும் காலில் ஓடினார். சாலையில் கிடந்த கற்கள் எதையும் பொருட்படுத்தாமல் ஓடி மாரத்தானில் முதலிடம் பிடித்து அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தினார். இது தொடர்பாக ரமாபாய் கூறியதாவது: இந்த மாரத்தானில் பல பெண்கள் பங்கேற்றாலும், பரிசை வெல்வது என உறுதியாக இருந்தேன்.

மாரத்தானில் ஓடிய போது, மகளின் எதிர்காலம் தான் என் கண் முன் வந்து நின்றது. இதில் கிடைத்த 3 ஆயிரம் ரூபாய், மகளுக்கு புத்தகம் வாங்க உதவும் என்றார்.இந்த மாரத்தானில் அவரின் இரண்டாவது மகள் பூஜாவும் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்தார். தனது தாயை ஊக்குவிக்கவே மாரத்தானில் பங்கேற்றேன். ஆனால், அவர் முதலிடம் பிடிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. பல்வேறு சவால்களை எனது தாயார் சந்தித்தாலும் அவர் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. எனது சகோதரி போலீஸ் தேர்வுக்காக படித்து வருகிறார். போலீஸ் ஆவதே அவரது கனவு. நான் வங்கித்துறையில் பணியாற்ற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூஜாவின் அர்ப்பணிப்பை பார்த்த கல்வி மைய இயக்குனர், அவரின் பயிற்சிக்கு ஆகும் செலவை தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்து உள்ளார்.