மதுரையில் 'மோடி’- ரூ.4,400 கோடி திட்டங்கள் தொடங்கிவைப்பு
மதுரையில் ரூ.4,400 கோடி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி, தமிழகம், கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்த 5 மாநிலங்களிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். புதுவையில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு சென்னை வந்தார். இன்று காலை புதுச்சேரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மதுரை விமான நிலையம் அருகே நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன், அமைச்சர் எ.வ.வேலு, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
மதுரையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ரூ.4,400 கோடி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். கும்பகோணம், வேலூர், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் ஆகாஷ்வாணி பண்பலையையும் தொடங்கிவைத்தார். மேலும் மறுசீரமைக்கப்பட்ட காரைக்குடி, மொரப்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, சோழவந்தான் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களை திறந்து, சென்னை கடற்கரை, எழும்பூர் 4வது பாதையை மோடி அர்ப்பணித்தார். மேலும் மரக்காணம்- புதுச்சேரி, பரமக்குடி- ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.