×

மோடி உருவபொம்மை எரிப்பு! புதுச்சேரியில் பரபரப்பு

 

புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசை சேர்ந்த இஸ்லாமிய பெண் நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது. 

டெல்லியில் நடந்த ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. புதுச்சேரியில் பாஜக இளைஞரணி சார்பில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அங்கு திரண்ட பாஜக இளைஞரணியினர் ராகுல் காந்தி, காங்கிரசுக்கு எதிராக கோஷமிட்டு ராகுல் உருவப்பொம்மையை எரித்தனர். இதனால் காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர். இது பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி தரும் வகையில் நேற்று புதுச்சேரி காங்கிரசார் பாஜக தலைமை அலுவலகம் அருகே எல்லைபிள்ளைச்சாவடியில் ஒன்று கூடினர். அங்கிருந்து பாஜக அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்தனர். இதில் பாஜக, காங்கிரசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் கல்வீசி தாக்கிக் கொண்டனர். போலீஸ் எஸ்பி வம்சிதரெட்டி உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். இருதரப்பையும் போலீசார் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். 

இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரசார் மீது ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு,  அய்யப்பன், சிலம்பரசன், ஹரிஹரன், சுரேந்தர் மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல்,  அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் , உருவபொம்மை எரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில்  வழக்குப் பதிவு செய்தனர். இதில் அரசு ஊழியர் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவு ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவு ஆகும். இதேபோல் காங்கிரஸ் அலுவலகம் முன்பு ராகுல் உருவபொம்மை எரித்த பாஜக மாநில இளைஞரணி தலைவர் ஆடலரசன், நிர்வாகிகள் மகேந்திரன், தமிழரசன், அமல்ராஜ், விக்ரம், கோகுல்காந்தி, அபிதோஜெயின், பாரத்சர்மா, பாலாஜி, அருள், தமிழ் செல்வன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.