×

மோடி, அமித்ஷா அடிக்கடி வருவார்கள்... ஆனால் தமிழகத்திற்கு தேவையான நிதி மட்டும் வராது - உதயநிதி ஸ்டாலின்..!

 

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை: திமுக இளைஞரணியில் 5 லட்சம் பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் எந்த அரசியல் கட்சி சார்பு அணிக்கும் இப்படி வலிமையான கட்டமைப்பு கிடையாது. இன்று பல கட்சிகள் பூத் கமிட்டி அமைக்க ஆள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன.

மோடி, அமித்ஷா அடிக்கடி வருவார்கள். ஆனால் தமிழகத்திற்கு தேவையான நிதி மட்டும் வராது. உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் மோடி, அமித்ஷாவின் பருப்பு வேகலாம். ஆனால் தமிழகத்தில் ஒருபோதும் வேகாது. பாஜக கூட்டணியில் உள்ள அனைவரும் பஞ்சரான டயர்கள்.

உங்களுடைய பஞ்சரான டயர்களும், ஓடாத டப்பா இன்ஜினும் தமிழ்நாட்டில் என்றைக்கும் ஓடவே ஓடாது. இன்னொரு பக்கம் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுற்றிக் கொண்டிருக்கிறது. கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவும் இல்லாமலும் தெரியாமலும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் ஒரு என்டர்டெயின்மென்ட் என்று நினைத்துக்கொண்டுள்ளனர்.

அரசியல் என்பது மக்கள் பணி; அது ஒரு கமிட்மெண்ட், டெடிகேஷன் என்பதை திமுகவினர் காட்ட வேண்டும். கமிட்மெண்ட், டெடிகேஷன் இல்லாமல் யாராலும் சாதிக்க முடியாது. பாசிசத்தையும் அடிமைத்தனத்தையும் விரட்ட வேண்டும். டெல்லிக்கும், தமிழகத்திற்கும் இடையே நடக்கும் போர் தான் தமிழக சட்டமன்ற தேர்தல்.

சமூக நீதிக்கும், சமூக அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். தமிழுக்கும், இந்தி திணிப்புக்கும் இடையே நடக்கும் தேர்தல். இந்த போரில் முன்கள பணியாளர்கள் இளைஞரணி தான். தமிழகம் என்றும் டெல்லிக்கு தலைகுனியாது என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கோவி.செழியன் ரகுபதி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.