இன்று முதல் அண்ணாமலையார் கோயிலில் செல்போன் எடுத்து செல்ல தடை..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் இன்று (செப்.1) முதல் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க கோயில் வளாகத்தில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செல்போனை அங்கு ஒப்படைக்க ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை செலுத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ரமேஷ் கடந்த சில தினங்களுக்கு முன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் கோவிலுக்குள் சென்ற அவர், பக்தர்கள் தரிசனம் செய்யும்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வார விடுமுறை நாட்கள், பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் எந்தெந்த வழிகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள், எவ்வாறு தரிசனம் செய்து வெளியேற்றப்படுகிறார்கள் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கியூ லைன் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
தொடர்ந்து கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிலில் பக்தர்கள் விரைவாகவும் சிரமமின்றியும் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக அமைதிக்காகவும், கோவில் சிற்பங்கள் மற்றும் கட்டிடக் கலையை கண்டு ரசிப்பதற்காகவும் வருகிறார்கள். ஆனால் சிலர் செல்போன்களில் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, ரீல்ஸ் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் மற்ற பக்தர்களின் ஆன்மிக அனுபவம் பாதிக்கப்படுகிறது என்றார்.
இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கியூ லைனில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக உதவும் வகையில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், கோவில் வளாகத்துக்குள் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்க கூடுதல் மருத்துவர்களும் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.