"இதைவிடப் பெரிய அவமானம் இல்லை"- கமல்ஹாசன்
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், "தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.