“தவெக அரசு 3 மாதம் தாங்குமா என்ற நிலைதான் இருக்கிறது”- மு.க.ஸ்டாலின்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் MLA பனையூர் பாபு, ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். 2021 தேர்தலில் விசிக MLA ஆக இருந்த பனையூர் பாபுவுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. தவெக அரசுக்கு விசிக ஆதரவு தெரிவித்ததால், திருமாவளவன் மீது அதிருப்தி ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று 1200 பேருடன் திமுகவில் இணைந்தார் பனையூர் பாபு.
அவரை வரவேற்று உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், “யாரையும் குறைத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் இருக்கும் என்றவர் அறிஞர் அண்ணா. யாரையும் விமர்சிக்காத பனையூர் பாபு எதிர்கட்சியாக களப்பணியாற்ற திமுகவில் இணைந்துள்ளார். உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம் என வந்துள்ளார் பனையூர் பாபு. கொள்கைவாதியாக, போராளியாக கருத்துகளை முன் வைப்பவர் பனையூர் பாபு. வேறு கட்சியை விட்டு வந்தாலும் அரசியல் நாகரிகத்துடன் விமர்சிக்கக் கூடியவர் பாபு. அதற்கு அவரது அரசியல் பயணமே சாட்சியாக அமைந்திருக்கிறது.
திமுக ஆட்சியில் இருப்பதை விட எதிர்கட்சியாக இருக்கும்போதுதான் அதிக வேலை இருக்கும். 6 மாதம் இல்லை, 5 மாதம் இல்லை, 4 மாதம் இல்லை, 3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்றபோது நான் சொன்னேன்... 6 மாதங்களுக்கு இத பத்தி பேசப்போறது இல்லை என்று... ஆனால் 6 மாதங்களுக்கு முன் பேச வேண்டிய சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது” என்றார்.