×

“அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்”- மு.க.ஸ்டாலின்

 

தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு என்றைக்குமே #OutOfControl-தான்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த அலுவலக நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் இந்தி வார்த்தையை கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVAYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும், இந்தியிலும் எழுதியுள்ளனர். இந்தி தெரியாத மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு ஹிந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ளது மறைமுக இந்தி திணிப்பு என ஒன்றிய அரசையும் ரயில்வே நிர்வாகத்தினரையும் கண்டித்து, முதல்வர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குரல் கொடுத்தனர். திமுகவினர் இன்று மதியம் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . தொடர்ந்து எழுந்த கண்டனங்கள், போராட்டங்களை தொடர்ந்து இந்தி பெயர் பலகையை மாற்றப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து அங்கு தமிழ், ஆங்கிலம், இந்தி வடிவில் எழுதப்பட்டிருந்த இந்தி வார்த்தை அகறப்பட்டது. அங்கு தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று காட்டுபவர்களும் - அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள்! தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு என்றைக்குமே #OutOfControl-தான்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.