×

“தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட், Black and Redதான்”- மு.க.ஸ்டாலின்

 

தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட், Black and Red-தான் – கருப்பு-சிவப்புதான்! 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான், ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ‘ஸ்டார்ட்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


திருப்பத்தூரில் நடைபெற்ற ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “கழகத்தின் வேர்களாக – கழகத்திற்கும், மக்களுக்குமான உறவுப் பாலமாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தர இருக்கும், வாக்குச்சாவடி குழுவினரான உங்களைச் சந்திப்பதில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்! கருப்பு சிவப்பு துண்டுடன் தேர்தல் களத்திற்கு தயாராக இருக்கும் உங்களைப் பார்க்கும்போது, திருவிடந்தை தந்த எனர்ஜியும் – உற்சாகமும், இந்தத் திருப்பத்தூரில் டபுள் ஆகிறது! உங்கள் கான்ஃபிடன்ஸ் லெவலை பார்க்கும்போதே, அடுத்ததும் தி.மு.க. ஆட்சிதான் என்று, மக்கள் சொல்வது தெரிகிறது!அடுத்தடுத்து, நாம் அறிவிக்கும் திட்டங்களாலும், அடுத்து நடக்க இருக்கும் மதுரை, கோவை பயிற்சிக் கூட்டங்களாலும், இந்த எனர்ஜியும், உற்சாகமும், கூடிக்கொண்டே போகும். அதற்கு நான் கேரண்டி!

வடக்கு மண்டல BLA-2, BLC, BDA வாக்குச்சாவடி குழுவினருக்கான ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி நிகழ்ச்சியையே மாநாட்டைப் போன்று ஏற்பாடு செய்து அசத்தியிருக்கும், வடக்கு மண்டலப் பொறுப்பாளர்  - மாண்புமிகு அமைச்சர் ‘எதிலும் வல்லவர்’ எ.வ.வேலு அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்! அவரோடு, தோளோடு தோள் நின்ற ஆற்றல்மிகு மாவட்டக் கழகத்தின் செயலாளர்கள் – இயக்கத்தின் முன்னோடிகள் - நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகளோடு, தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்! திருவண்ணாமலை மாவட்ட 8 தொகுதிகள் - வேலூர்  மாவட்ட  5 தொகுதிகள் - தருமபுரி மாவட்ட 5 தொகுதிகள் - கிருஷ்ணகிரி மாவட்ட 6 தொகுதிகள் - ராணிப்பேட்டை மாவட்ட 4 தொகுதிகள் - கள்ளக்குறிச்சி மாவட்ட 4 தொகுதிகள் - சேலம் மாவட்ட 11 தொகுதிகள் என்று, இந்த மாநாட்டிற்கு வந்திருக்கும் நீங்கள் உங்களுடைய 40 தொகுதிகளிலும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெற வைக்கத் தயாராக இருக்கிறீர்களா? வடக்கு மண்டலத்தில் அனைத்துத் தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற என்ற செய்தியைத்தான் ரிசல்ட் அன்றைக்கு டி.வி.யில் நாம் பார்க்க வேண்டும்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை நாம் பெற்றோம். அப்போது இருந்ததைவிட அதிகமான திட்டங்களை இப்போது நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம்! அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் தீர்த்து வைத்திருக்கிறோம்! அதனால், பெரிய வெற்றியை வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் மூலமாக நான் எதிர்பார்க்கிறேன். 2019-இல் இருந்து நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தலிலும் நமக்கு, வெற்றி மேல் வெற்றிதான்! அதுவும் சாதாரண வெற்றி அல்ல; சதிகளை முறியடித்த சரித்திர வெற்றி! ஒவ்வொன்றும்  எதிரிகளை கலங்கடிக்கும் வெற்றி! இந்தியா முழுவதும் எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட், Black and Red-தான் – கருப்பு-சிவப்புதான்! 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான்! ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ‘ஸ்டார்ட்’! இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை! மிகவும் அடக்கத்துடன், மிகுந்த பணிவுடன், நம்முடைய அரசு செய்திருக்கும் சாதனைகள் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்! அனைத்துக்கும் மேல், உடன்பிறப்புகளான உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன். உங்களைப் போன்ற நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கும்போது, வெற்றியைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிக்கத் தேவையில்லை! உங்களை வழிநடத்தி, உங்களுக்கான ‘டாஸ்க்’-ஐ ஒப்படைத்தாலே போதும்! மீண்டும் உதயசூரியன் ஆட்சி உறுதி! உறுதி! உறுதி!

இதுவரை இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியும் தி.மு.க.வின் கோட்டை என்று நாம் இந்த முறை நிரூபித்துக் காட்ட வேண்டும்! 2026-இல் தி.மு.க.வின் வெற்றி என்பது, இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசும் வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும்! தமிழ்நாடு முழுவதும் 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம், ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களை நாம் நியமித்திருக்கிறோம்! தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பூத் இருக்கிறது? 75 ஆயிரம் பூத்! இவ்வாறு, ஒவ்வொரு பூத்திலும் நாம் செட் செய்திருக்கும் ‘மினிமம் டார்கெட்’, 350 வாக்குகள்! இந்த டார்கெட்டை நாம் அச்சீவ் செய்தாலே, 2 கோடியே 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் வாங்கிவிடுவோம். இந்தத் தேர்தலில், 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்குக் குறையாமல் நாம் வாங்கியே ஆக வேண்டும்! இதை நடத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு! உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தருவது என்னுடைய பொறுப்பு“2 கோடியே 50 லட்சமா?” அப்படி என்று நினைத்து யாரும் மலைக்க வேண்டாம்; யோசிக்க வேண்டாம். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் தலா 40-50 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், அவ்வளவுதான்! சிம்ப்பிள்! ஒவ்வொருவரும் அவர்களுக்கு அசைன் செய்திருக்கும் 50 வாக்குகளை பெற்றுத் தந்தாலே போதும்! நம்முடைய டார்கெட்டை அச்சீவ் செய்து விடுவோம்! 200 தொகுதி நிச்சயம்! 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதுதான் நம்முடைய லட்சியம்! அதற்கு முதலில் அடுத்த 2 மாதம் ஓய்வை மறந்து உழைக்க வேண்டும்!!” எனக் கூறினார்.