"சுய மரியாதை முக்கியம் என உணர்ந்து வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார்”- மு.க.ஸ்டாலின்
ஜெ. மறைவுக்கு பின் சுயமரியாதையோடு பணியாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் வைத்திலிங்கத்துக்கு இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில அவரது ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேர் தி.மு.க வில் இணைந்தனர். குறிப்பாக தஞ்சை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர். முக்கிய நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கட்சி துண்டை அணிவித்து அவர்களை வரவேற்று வாழ்த்தினார். தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி.செழியன், அன்பில் மகேஷ், மெய்யனாதன், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இது இணைப்பு விழாவா அல்லது இணைப்பு விழா மாநாடா என்கிற அளவிற்கு நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நான் பேசாமல் போனால் உங்களுக்கும் நிம்மதி இருக்காது, எனக்கும் நிம்மதி இருக்காது. முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் அவர்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு விஸ்வாசமாக இருந்து சுறுசுறுப்பாக பணியாற்றியதை நான் பார்த்துள்ளேன். ஜெயலலிதா மறைவுக்கு பின் சட்டமன்றத்தில் அவர் சோகத்தோடு அமர்ந்திருப்பார். சுயமரியாதையோடு நம்மால் பணியாற்ற முடியவில்லை என்கிற ஏக்கம் அவருக்குள் இருந்துள்ளது. இந்த நிலையில் தான் அவர் தாய் கழகமான திமுகவில் இணைந்துள்ளார். தற்போது அவர் லேட்டாக வந்து திமுகவில் இணைந்துள்ளார். லேட்டாக வந்தாலும் லேட்டாஸ்டாக வந்துள்ளார். மீண்டும் திராவிட மாடல் அரசு உதயமாகி ஏற்கனவே செய்த சாதனைகளை விஞ்ச கூடிய அளவிற்கு நம் தேர்தல் பணிகள் இருக்க வேண்டும்” என்றார்.