ரூ.5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு சார்பில், தேசிய அளவில் தலா ரூ.5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம். வாசிப்பு மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவு தீ பரவ வேண்டும். பழமைகளைப் பொசுக்கி தமிழ்நாட்டை பண்படுத்தியது திராவிட இயக்கம். மனித இனம் தனது சிந்தனைகளை பிறருக்கு கொடுக்க வேண்டும் என்பதே புத்தகங்களின் பயன்பாடு. எதையும் கேள்வி கேட்டு, பழமையை பொசுக்கிய திராவிட இயக்கம்தான் தமிழ்நாட்டை பண்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை கோயில்களாக எழுப்புவோம். தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல, அன்பு, அறிவை பகிர்ந்து கொள்ளவும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ் மண்ணின் சிந்தனைகள், எழுத்துக்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்.
2026 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இறுதி செய்யப்பட்டு அறிவிக்க இருந்த நிலையில், ஒன்றிய அரசின் தலையீட்டால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கிய விருதுகளில் கூட அரசியல் தலையீடு இருப்பது ஆபத்தானது. பல்வேறு மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும். முதற்கட்டமாக தமிழ், கன்னடா, தெலுங்கு, ஒடியா, மலையாளம், பெங்காலி படைகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சமும் வழங்கப்படும்” என்றார்.