ஆடுகளுக்காக அழும் ஓநாய்கள்!- ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
பா.ஜ.க.வும் பா.ஜ.க. கூட்டணியும் ஆட்சி செய்கின்ற வட இந்திய மாநிலங்களில் எத்தனை வடஇந்திய மொழிகளைப் பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகத் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கும் வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் ஆளுநர். பா.ஜ.க.வும் பா.ஜ.க. கூட்டணியும் ஆட்சி செய்கின்ற வட இந்திய மாநிலங்களில் எத்தனை வடஇந்திய மொழிகளைப் பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள்? ஆளுநரிடம் பதில் இருக்காது. அவரைப் பேச வைப்பவர்களிடமும் பதில் இருக்காது.
தென்னிந்திய மொழிகளுக்காகப் போலிக் கண்ணீர் வடிக்கும் ஆளுநர் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை தராமல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்தியவர். 'தமிழ்நாடு' என்ற பெயரைச் சிதைக்க நினைத்தவர். உலகப் பொதுமறையான திருக்குறளைப் படைத்து, தமிழின் உலக அடையாளமாகத் திகழும் அய்யன் திருவள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசிக் கறைப்படுத்தியவர். தமிழர்கள் அனைவரின் கண்டனத்திற்கும் ஆளானவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.