கோவையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சிறுமி வெண்பாவின் பெற்றோரை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிப்பவர் சோமு(எ) சந்தோஷ். மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. இவர்களின் மகள் வெண்பா (6). 2ம் வகுப்பு படித்து வந்த இந்த சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அதற்காக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 25ம் தேதி சிறுமி மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து, அவரது பெற்றோர்கள் ஒப்புதலோடு வெண்பாவின் சிறுநீரகம், கல்லீரல், தோல் மற்றும் கண் ஆகிய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு நேரில் சென்றார். பின்னர், சிறுமியின் பெற்றோர் சோமு (எ) சந்தோஷ், சுகன்யா ஆகியோரை சந்தித்து, சிறுமியின் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்து, உறுப்பு தானம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் M. K. Stalin pic.twitter.com/7VKd3F2xZV
— ɢᴏᴡᴛʜᴀᴍ udumalaipettai (@GOWTHAM34967110) February 27, 2026
உடல் உறுப்பு தானத்தில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்கும் நபர்களின் இறுதிச்சடங்குகள் முதல்வரின் உத்தரவின் பேரில் அரசு மரியாதையுடன் கடந்த 2023 செப்டம்பர் 23ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில், உடல் உறுப்பு தானம் அளித்த 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.