முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்கேற்ப பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்தொடர்ச்சியாக, உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, முதல்வர் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த காலங்களில் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார். முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வரும் 30 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்படுகிறார். முதலீட்டு பணிகளை முடித்துக்கொண்டு அடுத்த மாதம் 8ம் தேதி தமிழ்நாடு திரும்புவார்.