×

நேற்று கண் கலங்கிய பிரேமாவுக்கு இன்று வீட்டை பரிசளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவியின் பெற்றோருக்கு 12 மணி நேரத்தில் வீடு வழங்கிய முதல்வரின் செயல் கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமா. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்று சென்னை தனியார் நிறுவனத்தில் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார்.  இவரின் பெற்றோர் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனர். எனினும் இத்திட்டத்தில் இவர்களுக்கு வீடு ஒதுக்கப்படாமல் இருந்து வந்தது.  

இந்நிலையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமா, நான் முதல்வன் திட்டத்தால் தான் அடைந்த சாதனைகள் குறித்தும் இத்திட்டத்தின் மூலம் தனது குடும்பம் நல்ல நிலமைக்கு வரும் எனவும் தனது பெற்றோர், மழைக்கு ஒழுகும் வீட்டில் வசிப்பதாகவும் கண்ணீர் மல்க கூறினார். அப்போது இதனைக் கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரேமா குடும்பத்திற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து தென்காசி ஆட்சியர் கமல் கே. கிஷோர் மாணவியின் வீட்டுக்குச் சென்று கலைஞர் கனவு இல்லத் திட்ட பணி ஆணையை வழங்கினார். இதையடுத்து பிரேமா குடும்பத்தினர் மட்டுமல்லாமல் கிராமமே மகிழ்ச்சியில் திளைக்கிறது.


இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்! எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்! உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன். #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.