நாளை முதுமலை செல்கிறார் மு.க.ஸ்டாலின்- யானைகள் முகாமை காண சுற்றுலா பயணிகளுக்கு தடை
உதகையில் தங்கி உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை முதுமலை செல்கிறார். வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடும் அவர் தெப்பக்காடு பழங்குடியின கிராமத்தில் யானை பாகன்கள் மற்றும் காவடிகள் என 44 பேருக்கு 5.06 கோடி மதிப்பில் கட்டபட்டுள்ள மாவுத் கிராமத்தையும் திறந்து வைத்து வளர்ப்பு யானைகளுக்கு உணவு அளித்து முகாமை பார்வையிடுகிறார்.
5 நாள் பயணமாக உதகைக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உதகையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளார். அவர் 15-ந்தேதி காலை அரசு தாவரவியல் பூங்காவில் பிரசித்தி பெற்ற 127 வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக வந்துள்ள நிலையில் நாளை மதியம் முதுமலைக்கு புறப்பட்டு செல்கிறார். தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு செல்லும் அவர் யானைகள் முகாமில் பணியாற்றும் யானை பாகங்கள் மற்றும் காவடிகள் என 44 பேருக்கு 5.06 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 44 வீடுகள் கொண்ட மாவுத் கிராமத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். அதனை தொடர்ந்து வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் யானைகளுக்கு உணவளிக்கிறார்.
அங்கு ஆஸ்கர் விருது வென்ற குறும்படமான ‘தி எலபெண்ட் விஸ்பரர்ஸ்’ குறும்படத்தில் நடித்த பொம்மன் வெள்ளி ஆகியவரையும் சந்திக்கிறார். முதல்வர் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு செல்வதால் நாளை மாலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுவதாக முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் அறிவித்துள்ளது.