“சினிமா சுனாமி... இந்த ஆட்சி விரைவில் அது கவிழத்தான் போகிறது”- மு.க.ஸ்டாலின்
இது அரசியல் சுனாமி அல்ல சினிமா சுனாமி.மதில் மேல் பூனை மாதிரி இருக்கு இந்த ஆட்சி இருக்கிறது. விரைவில் அது கவிழத்தான் போகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மதில் மேல் பூனையாகதான் தவெக ஆட்சி இருக்கிறது. விரைவில் ஆட்சி கவிழத்தான் போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் பொறுத்திருப்போம். நிச்சயமாக இது 5 ஆண்டுகாலம் நடைபெறக்கூடிய ஆட்சி அல்ல, உறுதியாக சொல்கிறேன். குழந்தைகள் புதிய பொம்மையை பார்த்தால் அது வேண்டுமென விரும்புவர்கள். ஆனால், 2 நாட்களில் போர் அடித்துவிடும். அதை தூக்கி எறிவார்கள். அப்படிதான் தங்களுக்குப் பிடித்த நடிகர் கட்சி ஆரம்பித்ததால் ஒரு ஆர்வத்தால் மக்கள் வாக்கு அளித்துள்ளனர். இன்னும் கொஞ்சம் நாட்களில் அதன் மீதான Interest போய்விடும். இது போன்ற தோல்விகளை என்னைப் போன்ற சீனியர்கள் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், இளைஞர்களான உங்களுக்கு பெரிய வருத்தத்தை தந்திருக்கிறது. ‘திமுக ஆளுங்கட்சியாக வரமுடியாததை விட நம் தலைவர் ஜெயிக்கவில்லையே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்று நிறைய பேர் பேசுவதைப் பார்க்கிறேன். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால், என்றும் தனிமனிதர்களை விட இந்த இயக்கம்தான் பெருசு. என்னுடைய தோல்வியை விட கழகத்தின் தோல்விக்குதான் நீங்கள் வருத்தப்பட வேண்டும். நான் தோல்வியடைந்து கழகம் ஜெயித்திருந்தால் கூட நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.
குழந்தைகள் அம்மாவை தேடுவது போல், நம் மக்கள் நம்மைத்தான் ஏக்கத்துடன் தேடுவார்கள். இது அரசியல் சுனாமி அல்ல, சினிமா சுனாமி. சினிமா கவர்ச்சியால் மக்களை மயக்கி வாக்கு வாங்கியிருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைக்கூட பெறவில்லை. நிச்சயம் இது 5 ஆண்டுகாலம் நடைபெறக்கூடிய ஆட்சி இல்லை. விசிக, முஸ்லிம் லீக் ஆதரவளிக்கத்தான் சென்றார்கள் இப்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் எந்த நேரத்தில் என்ன ஆகும் என்பது பொறுத்திருப்போம்” என்றார்