×

‘காலை சிற்றுண்டி' திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

 

அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை  முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அரசுப்பள்ளியில்   1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்க கல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதற்கட்டமாக  15 மாவட்ட அரசு பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில் பரிசுத்தமான முறையில் திட்டம் தொடங்கப்படும் என்றும்  இத்திட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.   
 


இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான இன்று  மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி (1 முதல் 5 வகுப்பு வரை) குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நடப்பாண்டிலேயே செயல்படுத்தப்படுகிறது.  அத்துடன் உணவை, காலை 5:30 - 7:45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும், காலை 8:15-8:45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.