×

பள்ளி சாம்பாரில் சாணி பவுடர் கலப்பு

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் காலை உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் காலை உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய ஆறுமுகம் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பள்ளி சமையலர் பணியில் இருந்து தனது மனைவி நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், மாணவி ஒருவரை தூண்டி சாம்பாரில் சாணி பவுடரை கலக்கச் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட ஆட்சியர், இது தனிபட்ட விரோதத்தில் நடைபெற்ற சம்பவம். சாம்பாரில் சாணி பவுடர் கலந்தது முன் கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரியரின் விழிப்பால் அசம்பாவிதம் டதவிர்க்கப்பட்டு மாணவர்கள் தப்பினர் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் சாம்பாரில் சாணிப்பவுடரை, அதேஊரைச் சேர்ந்த ஒருவர் மாணவி ஒருவரைக் கொண்டு கலக்கத் தூண்டியதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆசிரியரின் வழக்கமான உணவு பரிசோதனையின் போது இச்சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி மாணவர்கள் உயிருடன் விளையாடிய இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சாணிப்பவுடர் விற்பது சட்டப்படி குற்றம் என்ற நிலையில் சாதாரண மளிகைக் கடையில் கூட விற்பனை செய்யும் அளவிற்கு இதன் புழக்கம் உள்ளது அச்சமூட்டுகிறது.

இதுதொடர்பாக சாணிப்பவுடரைக் கலக்கத் தூண்டியவர் கைது செய்யப்பட்டாலும் பள்ளி, விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி சத்துணவு விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.மேலும் சமீப காலங்களில் சத்துணவு உணவில் பல்லி விழுவது, தரமற்ற பொருட்கள் கொண்டு சமைப்பது போன்றவற்றால் அதனை உண்ணும் மாணவர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.எனவே அவ்வப்போது உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வும், சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா என்பதையும் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமன்றி, ஒவ்வொருமுறையும் தவறாமல் உணவினை பரிசோதனை செய்த பின்பே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.