×

"மிஷன் 2026": ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி..!

 

பா.ஜ.க. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கேரளாவிலும் தனது கட்சியை கால் பதிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டது. அதன் பலனாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கேரள மாநிலத்தில் பா.ஜ.க. கால் பதித்தது. திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி கவுரவப்படுத்தியது.

இந்தநிலையில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியது. அங்குள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளில் பா.ஐ.க. வெற்றிபெற்றது. இதனால் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலிலும் அவர்களே வெற்றி பெற்றனர். அது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தில் உள்ள 34 சட்டமன்ற தொகுதிகளில் தங்களின் பலத்தை காட்டியதாக பா.ஜ.க. மதிப்பிட்டுள்ளது.

நேமம், கட்டகடா, கஜகூட்டம், செங்கனூர், மலப்புழா, எலத்தூர், காசர்கோடு, மஞ்சேஸ்வரம், அரூர் ஆகிய 9 தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பா.ஜ.க. பெற்றுள்ளது. அவற்றில் 5 தொகுதிகளில் பெற்ற வாக்குகள் 45 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. கோவளம், வட்டியூர்காவு, பாறசாலை, சிராயின்கீழ், கொட்டாரக்கரா, புதுக்காடு, இரிஞ்சாலக்குடா, கொடுங் கல்லூர், நாட்டிகை, ஒட்டப்பாலம், பாலக்காடு, மாவேலிக்கரை ஆகிய 12 தொகுதிகளில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றிருக்கிறது.

திருவனந்தபுரம், அட்டிங்கல், குன்னத்தூர், ஆரன்முளா, கருநாகப் பள்ளி, குந்தாரா, சேலக்கரா, வடக்கஞ்சேரி, மணலூர், சொரனூர், குனனமங்கலம், கோழிக்கோடு வடக்கு, நென்மாரா ஆகிய 13 தொகுதிகளில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை வாக்குகளை பெற்றுள்ளது. வட்டியூர்காவு, நெமோத் ஆகிய தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சட்டமற்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் நோக்கில் உள்ளாட்சி தேர்தல் பணி கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம் என்று பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. ஆகவே சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளாட்சி தேர்தலில் நியமிக்கப்பட்ட தலைவர்களை பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் கேரளாவுக்கு வருகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநக ராட்சியை கைப்பற்றினால் 45 நாட்களுக்குள் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தை அறிவிக்க கேரள மாநிலத்துக்கு பிரதமர் வருவார் என்று பா.ஜ.க. அறிவித்திருந்தது. அதன்படி பிரதமர் கேரளாவுக்கு ஜனவரி மாதம் 24-ந்தேதிக்கு முன்னதாக வரும் வகையில் திட்டம் வகுப்பப்பட்டு வருகிறது.

அப்போது பா.ஜ.க.வின் "மிஷன்-2026" திட்டத்தை பிரதமர் அறிவிப்பார் என தெரிகிறது. அப்போதே பா.ஜ.க., கேரளாவில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளது. உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்காக கேரள வந்திருந்த உள்துறை மந்திய அமைச்சர் அமித்ஷா, திருவனந்தபுரத்தில் "மிஷன் 2025" என்று பெயரிடப்பட்ட வளர்ந்த கேரளா திட்டத்தை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.