தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண்..! – நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி விமர்சனம்!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, அப்போதைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நெல்லைக்கு ரூ. 350 கோடியில் புறவழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது.
மிகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் மானூர் பகுதிக்கு அரசு கலைக் கல்லூரி ஒன்றை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதே போல், கட்சி பாராபட்சமின்றி அனைத்து தொகுதிகளுக்கும் தேவையான திட்டங்களைச் செய்து கொடுக்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இன்றைய சட்டமன்றத்தில் அமைச்சர்கள் உறுப்பினர்களைப் பார்த்து 'உன் மாமாவிடம் கேள், உன் அப்பாவிடம் சொல்' என்று தரம் தாழ்ந்து பேசுவது வருத்தமளிக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரிடமும் நம்பிக்கையாக இருக்க மாட்டார்கள். திமுகவுடன் 15 வருடம் நம்பிக்கையாக இருந்தார்கள். அங்கிருந்து ஒரே நிமிடத்தில் ஓடி வந்து விட்டார்கள்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையை மாற்றி அமைக்கும் பணிக்காக ரூ. 5.40 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் எதுவும் கோரப்படவில்லை. இதை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். டெண்டர் இன்றி இவ்வளவு பெரிய தொகையை நேரடியாகப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்வது கூட்டு ஊழலாகும். நான் இந்த தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண் வழங்குகிறேன்.
ஆளும் அரசு தொடர்பு பொய்யான ரீல்ஸ்களை பரப்பி வருகின்றனர். தேவையில்லாத பொய் செய்திகள் இளம் தலைமுறையின் எதிர்காலத்தை பாதிக்கும். தனித் தொகுதி என்ற பெயர் யாருடைய மனதையாவது புண்படுத்தும் வகையில் இருந்தால் அதனை மாற்றுவது நல்லது.
நெல்லை மட்டுமல்ல நாகர்கோவில், கோவில்பட்டி என தினந்தோறும் தமிழ்நாடு முழுக்க கொலைகள் நடந்து வருகின்றன. எனவே மாநிலம் முழுவதும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது" என்று கூறினார்.