சிறுமிகளுக்கு முதலுதவி செய்ததை இழிவுபடுத்துவதா?- அமைச்சர் விளக்கம்
சிறுமிகளுக்கு முதலுதவி செய்ததை இழிவுபடுத்துவதா? உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் திமுக ஐடி விங் பதிவு செய்திருப்பதாக அமைச்சர் விஸ்வநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூரில் மாரத்தான் ஓடிய சிறுமிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு டிஜிபி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜிக்கு வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில் மாரத்தான் போட்டியில் நடந்தது என்ன? என விளக்கம் அளித்த அமைச்சர் விஸ்வநாதன், “கடும் வெயிலால் மாரத்தான் போட்டியில் மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். மயங்கிய சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டு தூக்கி முதலுதவி செய்தேன். திமுக இழிவான பதிவுகளை வெளியிட்டு தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறது. எக்காலத்திலும் விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது. தலித் சமுதாய பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கும் என்னை குறிவைத்து சகித்துக் கொள்ள முடியாத வகையில் பதிவிட்டு, திமுக ஐடி விங் தங்களது தரத்தை தாழ்த்தி கொள்கிறது. கோயபல்ஸ் பிரசாரத்தை மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பதிவு செய்திருப்பது மிகவும் அநாகரீகம்.” எனக் கூறியுள்ளார்.