கள் இறக்க அனுமதியா?- அமைச்சர் சொன்ன பதில்
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தமிழக - கேரளம் எல்லை வரை இயக்கும் வகையில் புதிய வழித்தடத்திற்கான பேருந்தை கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “தமிழகத்தில் கள் இறக்க அனுமதி குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். முதல்வரின் வழிகாட்டுதலின்படி அடுத்து என்ன என்பதை சொல்லுவோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குவது பற்றிய முடிவு பரிசீலனையில் உள்ளது. டாஸ்மாக்கை தனியார் மயமாக்குவது குறித்து பல்வேறு தரப்பிடம் கருத்துகளை கேட்டு வருகிறோம். மக்களின் நலன் கருதி டாஸ்மாக் விவகாரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும். தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து 2,892 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,845 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருட்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும். ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்குவதே முதல்வர் விஜய்யின் நோக்கம்” என்றார்.