"இருப்பதிலேயே ரொம்ப ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட துறைனா அது டாஸ்மாக் தான்.."- அமைச்சர் விக்னேஷ்
தமிழகத்திலேயே ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட துறையாக டாஸ்மாக் துறை பார்க்கப்படும் நிலையை மாற்றி, கேரளா, கர்நாடகா மாநிலங்களைப் போல கண்ணியமான ஒரு துறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் அமைச்சர் விக்னேஷ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “அரசுக்கான வருவாய் மட்டுமே நோக்கமல்ல, தமிழகத்தில் டாஸ்மாக் துறை என்றாலே நம்மைப் பார்க்கும் விதமே வேறாக உள்ளது. பணியாளர்கள் தங்களது குழந்தைகளிடம் தாங்கள் டாஸ்மாக் நிறுவனத்தில் வேலை செய்கிறோம் என்று கூறக்கூட தயங்கும் நிலை உள்ளது. கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், மக்கள் தவறான பாதைக்குச் செல்வதைத் தடுக்கவும், மது விற்பனையை வரைமுறைப்படுத்தவுமே இத்துறை உருவாக்கப்பட்டது. அரசுக்கான வருவாய் மட்டுமே இதன் நோக்கமல்ல. கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இத்துறை சட்டவிரோதமாகச் சம்பாதிப்பவர்களின் கைகளில் இருந்ததால்தான் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினாலும், அதில் ஒரு ரூபாய் மட்டும்தான் ஊழியர்களுக்கு வரும்,மீதித் தொகை யார் யாருக்கோ சென்றுவிடுகிறது. நான் பொறுப்பேற்ற பிறகும் சிலர் 10 ரூபாய் வாங்குவதாகக் கூறுகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட வைப்பு தொகை மட்டுமே வாங்க வேண்டும், அதற்கு மேல் கூடுதலாக 10 ரூபாய் வாங்கக் கூடாது என்றுதான் நான் அறிவுறுத்தியுள்ளேன். வரும் ஜூன் மாதத்திற்குள் காலி பாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்களே திரும்பப் பெறும் நடைமுறையைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்படும். டாஸ்மாக் துறையில் என்னென்ன தவறுகள் நடக்கின்றனவோ, அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையிலேயே பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. கடந்த 8 நாட்களில் நான் இந்தத் துறையைப் பற்றி முழுமையாகப் படித்துள்ளேன். இதேபோல் நன்றாகப் படித்திருந்தால் நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகக் கூட ஆகியிருப்பேன். அந்த அளவுக்குத் துறையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். மது குடிப்பவர்கள் மட்டுமன்றி, சில தவறான நடைமுறைகளுக்கு ஊழியர்களும் அடிமையாகிவிட்டனர். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை படிப்படியாக உயர்த்துவது, கடைகளுக்கான மின்கட்டணப் பணிகளை ஒழுங்குபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மது பாட்டில்கள் உற்பத்தியாகும் இடத்திலேயே 'பார் கோடு' ஸ்டிக்கர் ஒட்டி வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன."நான் கூறும் நபர்களுக்குத்தான் பார் உரிமம் (டெண்டர்) வழங்கப்படும்" என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த ஆட்சியில் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். கேரளா, கர்நாடகா மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இத்துறையை ஒரு கண்ணியமான, சக தொழில் செய்யும் துறையாக மாற்றுவதே எங்கள் இலக்கு” என்றார்.