“நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வுக்காண மோடி அமைத்த உயர்நிலைக் குழு ஏமாற்று வேலை” - வன்னி அரசு
இளைஞர்களின் போராட்டத்துக்கு முன் மண்டியிட்ட ஒன்றிய மோடி அரசு, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு என்பதாக ஒரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில், “இளைஞர்களின் போராட்டத்துக்கு முன் மண்டியிட்ட ஒன்றிய மோடி அரசு, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு என்பதாக ஒரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் 'வல்லுநர்கள்' கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத், இந்திய உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ஒன்றிய கல்வித் துறை முன்னாள் செயலர் அனிதா கர்வால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அம்ரித் லால் மீனா ஆகியோர் உள்ளனர். இது ஒன்றிய அரசின் ஏமாற்று வேலை என்பதற்கான ஒரு உதாரணம், கடந்த 2024ஆம் ஆண்டு நீட் தேர்வில் பெருமளவில் மோசடி அரங்கேறியதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முன்னாள் ஐடி கான்பூர் நிர்வாகக்குழு தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழு 2024 ஜூலை 22ல் அமைக்கப்பட்டது மோடி அரசு. இக்குழு நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகத்தை சீரமைக்கும் என்று கூறப்பட்டது. அதே ஆண்டு அக். 22ல், 101 பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது ராதாகிருஷ்ணன் குழு. இன்று வரை அந்த பரிந்துரைகளை முழுவதுமாக நிறைவேற்றாத மோடி அரசு, இப்போது மீண்டும் ஒரு கண்துடைப்பு குழுவை அமைத்துள்ளது.
2024 நீட் முறைகேட்டில் இருந்து 2026 முறைகேடு வெளியானது வரை தேசிய தேர்வு முகமைக்கு முழுநேர தலைமை இயக்குநரக ஒன்றிய அரசு நியமனம் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு, தேர்வு முகத்தை சீரமைத்த லட்சணம் இது தான். இப்போது அமைக்கப்பட்டுள்ள குழு மீண்டும் தேசிய அளவிலான தேர்வு முறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராயும் என்று அறிவிக்கப்பட்டாலும், இளைஞர்கள் - மாணவர்கள் மத்தியில் நொறுங்கிப் போன மோடியின் போலி பிம்பத்தை காப்பாற்றுவதற்கான குழுவாகவே அமைந்துள்ளது. மாட்டு மூத்திரம் குடித்தால் நோய்கள் குணமாகும் என்று அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் முரணாக பாடமெடுக்கும் ஐஐடி இயக்குநர் காமகோடி இக்குழுவில் இருக்கிறார். ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்று இல்லை என்று ஒன்றிய மோடி அரசு அறிவித்த ஒன்றுக்கும் உதவாத ஆதார் அட்டையை கொண்டு வந்தவர் தான் குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி. - மாநில ஒன்றிய அரசுகளின் மக்கள் நல திட்டங்களிலிருந்து ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மற்றும் சிறுபான்மையின மக்களை ஒதுக்கி வைக்கும் கருவியாக ஆதார் அட்டையை ஒன்றிய அரசு பாஜக ஆளும் மாநில அரசுகள் பயன்படுத்துவதை பார்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் காலங்காலமாக நடத்தப்படும் 10 & 12 வகுப்புத் தேர்வுகள் 100% மாணவர்களின் நம்பிக்கையைப் பெற்றதாக உள்ளது.
எந்த சிக்கலோ தடங்கலோ இன்று வெற்றிகரமாக செயல்படுகிறது நமது தமிழ்நாடு அரசு. ஆனால் ஒன்றிய மோடி அரசோ சரக்கு போக்குவரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்று சொல்லி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைமை அதிகாரிக்கு கல்வித்துறை சீரமைப்பில் என்ன வேலை? எல்லோருக்கும் எல்லாம் (உள்ளடக்க) என்பது தான் அரசியலமைப்பு சட்டம் சொல்லும் சனநாயக பண்பு. சமமான கல்வி வசதியும், வாய்ப்பும் இல்லாத சூழலில், தகுதியை நிர்ணயித்து மாணவர்களை வெளியே நிறுத்தும் (பிரத்தியேக) தேர்வு முறைகள் மக்கள் விரோத சனாதன பண்புகளைக் கொண்டவை.நீட் தேர்வு ரத்து என்பதே நமது தங்கை அனிதா தொடங்கி ஒவ்வோராண்டும் நீட் உயிர்க்கொல்லி தேர்வுக்கு நாம் இழந்து வரும் குழந்தைகளுக்கான நீதியாக அமையும். இந்தாண்டு முறைகேட்டினால் ரத்தான நீட் தேர்வால் மட்டும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்தப் பதிவை எழுதும்போதே, நீட் மறுதேர்வு எழுதிய மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அங்கீதா சுரேஷ் சங்காலே எனும் 19 வயது மாணவி உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தி நெஞ்சை பிளக்கிறது. நீட் போன்ற உயிர்க்கொல்லி தேர்வு ரத்தே நமது ஒரே இலக்கு! நமது மாணவர் - இளைஞர் படை அதனை நிச்சயம் நிறைவேற்றும்! ” எனக் குறிப்பிட்டுள்ளார்.