திமுகவை விட தவெக சிறப்பாக பணியாற்றுகிறது - அமைச்சர் வன்னி அரசு
மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுகவை விட தவெக அரசு சிறப்பாகச் செயல்படுவதாக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, "மாநில உரிமைகளை பாதுகாப்பதில் முந்தைய திமுக அரசை விட தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது. தவெக ஆட்சி சரியாக நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. மாநில உரிமையை பொறுத்தவரை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாட வேண்டும் என்றவர் முதல்வர். மாநிலத்துக்கு தனிக் கொடி என்பது தவறான கருத்து அல்ல, விசிகவுக்கு அதில் மாற்றுக் கருத்து இல்லை. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கின் முடிவில் பழிவாங்கும் படலம் இல்லை என்பது தெரியும். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்கள் கொள்கையில் இருந்து மாறமாட்டோம். எதிர்க்கட்சிகள் சிறிய பிரச்சினைகளையும் ஊதிப் பெரிதாக்கும் வேலையை மட்டுமே செய்து வருகின்றனர்.
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியை பாஜக செய்கிறது. இதை திமுக நன்கு அறியும். அவர்கள் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் தான். இப்போது ஏன் போராடவில்லை எனத் தெரியவில்லை. இதற்காக அவர்கள் பாஜக ஆதரவு என சொல்லவில்லை. திமுக போராடுவது ஜனநாயகத்துக்கும் தமிழ் மண்ணுக்கும் நல்லது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு நல்லாட்சியை முதல்வர் விஜய் நடத்திவருகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை கடந்த ஆட்சியிலும் இருந்துள்ளது. ஆட்சி சிறப்பாக நடைபெறுவதை பொறுக்க முடியாமல், அதை திசைத் திருப்ப இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறுகிறது. தவெக ஆட்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக-வினர் அவதூறு பரப்பும் நோக்கத்தோடு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் உண்மை இல்லை. தரவுகளின் அடிப்படையில் தான் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்றார்.