"சீமான் சட்டசபைக்கு வர ஆசைப்பட்டார், ஆனால் மக்கள் ஏற்கவில்லை" - அமைச்சர் வன்னி அரசு
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் நிறைந்திருப்பதாக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் நிறைந்த கட்சியாக திமுக மாறிவிட்டது. அதிமுகவும் திமுகவும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல, இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இரண்டிலும் இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. கடந்த காலத்தில் சட்டமன்றத்தில் சட்டையெல்லாம் கிழிக்கப்பட்டது.. அந்தமாறி இப்போ எதுவும் நடக்கலையே... ஏன் சமூக நீதித்துறையாக மாற்றப்பட்டது என்பது குறித்து சட்டப்பேரவையிலேயே விளக்கம் கொடுத்திருக்கிறேன். புதிய தலைமைச் செயலக சர்ச்சை குறித்து முதல்வர் முடிவு எடுப்பார். பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியா தான் வி.சி.க.வின் இலக்கு. வி.சி.க. இருக்கும் அணி தான் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு அணி. வி.சி.க. இருக்கும் அணி தான் இடதுசாரி அணி. தியேட்டரில் இருந்து சினிமாக்காரராக வந்தவர்தான் சீமான். சட்டசபைக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்; ஆனால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்திற்கோ ஒருபோதும் செயல்படாத நபர், வெறுப்பு அரசியலை விதைக்கின்றவர் தான் சீமான். தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்” எனக் கூறினார்.