அரசமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது - உதயநிதி ஸ்டாலின்
கலைஞரின் தொலைநோக்கு திட்டங்களால் தமிழ்நாடு அடைந்த பயன்கள் குறித்தான கண்காட்சி மற்றும் இலக்கிய ஆய்வரங்கத்தை சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்கு திட்டங்களால் தமிழ்நாடு அடைந்த பயன்களை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்பட கண்காட்சிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வட்டி திறந்து வைத்து, காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக தற்பொழுது பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் எழுத்தாளர் கலைஞர் எனும் தலைப்பில் காணொளி திரையிடப்பட்டது இதனை அமைச்சர் பார்வையிட்டார். மேலும் மாநில கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கலைஞர் இளம் தலைவர் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்திய ஒன்றியத்திற்கே ஒரு முன்னோடியாக பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர். சீர்திருத்தங்களால் தமிழ்நாட்டை செதுக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை பெற்று தந்து, பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை பெற்று தந்து அதிகாரப்பணிகளில் நடைபோட செய்தவர் கலைஞர். அரை நூற்றாண்டு காலம் அரசியலின் மையப்புள்ளியாக இருந்தவர். அவரது வழியில் வந்த தற்போதைய முதல்வர், கலைஞர் விட்ட இடத்தில் இருந்து பல்வேறு திட்டங்களை செயலடுத்தி வருகிறார். காலை உணவு திட்டம், மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்து, நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களால் கலைஞரின் மறு உருவமாக இருந்து தமிழ்நாடு முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். ஒரு நல்ல அரசு என்பது உணவு உற்பத்தி, கல்வி, சுகாதாரம், தொழில்துறை உள்ளிட்ட அம்சங்களில் சிறந்துவிளங்க வேண்டும். தமிழ்நாடு இந்த துறைகளில் சிறந்து விளங்குகிறது. சாலை போடுவது, பஸ் விடுவது போன்ற பணிகளை எந்த ஆட்சியாளர்கள் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டை சமூக சீர்திருத்தங்களால் செதுக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இதனை 2006-ஆம் ஆண்டிலேயே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசு நிறைவேற்றி காட்டியுள்ளது. மேலும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்த முதல் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இதற்கு எனது சார்பில் கல்லூரிக்கு வாழ்த்துகள்” என்றார்.