×

காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிப்பு - அமைச்சர் உதயநிதி

 

அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

கள ஆய்வில் முதலமைச்சர்’திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலத்திற்கு வந்தார். அதனை தொடர்ந்து இன்று 2 வது நாளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சேலம் , நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், காந்தி,  மதிவேந்தன் ஆகியோர்  பங்கேற்றுள்ளனர்.  அதேபோல்  நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள்,  அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.  

இந்த கள ஆய்வில் பங்கேற்பதற்காக வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திடீரென அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். சேலம் மணியனூர் மற்றும் நெத்திமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர்,  குழந்தைகளிடம் தங்களுடைய குறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியதற்கு காரணமே குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது தான். தற்போது குழந்தைகள் அதிக அளவில் பள்ளிக்கு வருகின்றனர். காலை சிற்றுண்டி உணவு தரமானதாக உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். காலை சிற்றுண்டியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வகை வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் சீக்கிரம் வருகை புரிகின்றனர். நன்கு படிக்கின்றனர். இவ்வாறு கூறினார்.