×

“வெள்ளை வேஷ்டியை கழட்டிட்டு காவி பேண்ட் போட்டுகலாம்”- ஈபிஎஸ்க்கு சிவசங்கர் பதிலடி

 

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளின், சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது, மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியில் அமைக்கப்பட்டது தான் அறநிலையத் துறை. அப்படி நீதிக்கட்சி வழியில் வந்த திராவிட இயக்கத்தின் வழியில் ஆட்சி செய்ததாக சொன்ன எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசுவது, அவர் என்ன நிலைப்பாட்டுக்கு மாறிக் சென்றுள்ளார் என்பதை இதை காட்டுகிறது. அவர் வெள்ளை வேஷ்டியை கழட்டிவிட்டு, காவி பேண்ட் போட வேண்டிய நிலைக்கு மாறி விட்டதை காட்டுகிறது. கோயில் நிதி மட்டுமல்ல. எந்த வழியில் வந்த நிதியாக இருந்தாலும் அதை கல்விக்காக பயன்படுத்துவதில் தவறில்லை. அது மக்கள் நிதி. மக்களுக்கு மீண்டும் பயன்படுத்தபடுகிறது.

கோயிலுக்கு வருகின்ற பக்தர்களும் எல்லோரும் விரும்புவது எதிர்காலத்தில் வருகின்ற தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதே. எனவே அவர்களுடைய கல்விக்காக அந்த நிதியை செலவிடுவதில் தவறல்ல. வேறு தவறான வழிக்கு, செயல் படுத்தப்படவில்லை. இது குறித்து பல விவாதங்கள் ஏற்கனவே வந்துள்ளது, அப்போதெல்லாம் வாய் திறக்காத எடப்பாடி பழனிசாமி தற்போது வாய் திறப்பது அவர்களுடைய டெல்லி எஜமானர்கள் பேச சொல்லி இருக்கிறார்கள். அதனால் அவர் பேசுகிறார். மக்கள் மத்தியில் அவரது உண்மை முகம் வெளிப்படுகிறது. அதற்கான விளைவை அவர் சந்திப்பார்” என்றார்.