“தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன”- அமைச்சர் சிவசங்கர்
தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் தென் மாவட்டத்திற்கு செல்லும் பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் செங்கல்பட்டு வழியாக செல்ல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து துறை சார்பில் தீபாவளி பண்டிகைக்காக 20 ஆயிரம் பேருந்துகள் 4 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. இரண்டாவது நாளாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகள் இயக்கத்தை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் சிவசங்கர், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கத்தை ஆய்வு செய்துள்ளேன். கோயம்பேட்டில் இருந்து 25 நடைகள் பெங்களூருக்கும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் 135 பேருந்துகள் வேலூர் மார்க்கமாக 180 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு இரண்டு நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது.நேற்றை விட இன்று அதிக அளவில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிக அளவில் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு வசதியாக தனியார் பேருந்துகளையும் வாடகைக்கு எடுக்கப்பட்டு இயக்கப்பட அரசு தயாராக உள்ளது. அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இது தனியார் பேருந்துகளில் இருந்து பொதுமக்கள் பொது போக்குவரத்தை நோக்கி வருவதை காட்டுகிறது” என்றார்.