அரசுப் பேருந்துகளில் ’தமிழ்நாடு’ நீக்கம்?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வார்த்தை 2012 அதிமுக ஆட்சியிலேயே நீக்கப்பட்டது. ஒரு சிலர் இப்போது தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சையை கிளப்பி வருகின்றனர் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டைக்காடு ஆலத்தியூர் ஊராட்சி குறிச்சிகுளம், ஆர்.எஸ்.மாத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசு போக்குவரத்து கழகம் என்று இருக்கிறது. 'தமிழ்நாடு' என்ற பெயரை காணவில்லை என்று ஒரு சர்ச்சை சமீபத்தில் கிளம்பி இருக்கிறது. இது ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த 2012 காலத்திலேயே 'தமிழ்நாடு' என்ற பெயர் பேருந்துகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி என்று தற்போது உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் என எழுதினால் நீண்ட பெயராக உள்ளது.
பேருந்து முன் பக்கத்தில் படிக்க வசதியாக இல்லை என்ற காரணத்தினால் அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டது. 2012-ல் நடந்த சம்பவத்திற்கு 2025-ல் வந்து ஏதோ முக்கிய செய்தி போல சிலர் சர்ச்சையை கிளப்பி கொண்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கியதால் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது. அதிமுக காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும், தற்போது பேருந்து சேவை சென்று கொண்டிருக்கிறது. எனவே பிரச்சினைகள் ஏதுமில்லாததால் போக்குவரத்து கழகத்தில் எதை குற்றம் சாட்டுவது என்று தெரியாமல், திடீரென்று தமிழ்நாடு இல்லை என குற்றத்தை கண்டுபிடித்து சொல்கின்றனர்.
மெட்ராஸ் மாகாணம் என இருந்த இந்த மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியதே நாங்கள் தான். இவர்கள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். இது அதிமுக ஆட்சி காலத்தில் நடந்தது. அடுத்த ஆட்சியில் நடந்ததை நாம் மாற்றக்கூடாது என சிலர் குற்றம் சாட்டிய காரணத்துக்காகவே, ஒரு சில விஷயங்களில் கண்டும், காணாமல் இருக்கிறோம். எனவே இது ஏதோ திமுக ஆட்சியில் மாற்றப்பட்டதாக செய்தியை பரப்பு அவர்கள் இனி அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.