×

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது - அமைச்சர் தகவல்

 

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இனிமேலும் நீட்டிக்கப்படாது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

தமிழ்நாட்டின் 100 யூனிட் இலவசம் மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் என இலவச மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதாருடன் இணைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.  இதனையடுத்து தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. டிசம்பர் மாதத்துடன் இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், ஜனவரி 31ம் தேதி வரை அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கபட்ட நிலையில், பின்னர் மீண்டும் 13 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.  

இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28 இன்று நிறைவடைகிறது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், இன்னும் பலர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். எனவே இன்று மாலைக்குள் மின் - ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது.  இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.