×

ஒரே ஆண்டில் 1.17 லட்சம் மில்லியன் மின்சாரம் பொதுமக்களுக்கு விநியோகம்

 

தமிழ்நாட்டில் 2021-2022ம் ஆண்டு, இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் 1.17 லட்சம் மில்லியன் மின்சாரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மழைகாலத்தில் தடையில்லாமல் மின்சாரம் விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நேற்று 14433 மெகாவாட் மின்சார பயன்பாடு இருந்த நிலையில் இன்று 12 ஆயிரத்து 400 மெகவாட் என்ற அளவில் குறைந்துள்ளது. 

தமிழகத்தின் மின் தேவை முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. சோலார் மூலம் 2020-21ல் 6,115 மெகாவாட், 2021-22ம் ஆண்டில் 7,203 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 2021-2022ம் ஆண்டு, இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் 1.17 லட்சம் மில்லியன் யூனிட் மின்சாரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவர் மின்னகத்திற்கு தொடர்பு கொள்ளாமல் புகார் தெரிவித்ததாக சமூக வலைத்தளத்தில் தவறான கருத்து பரப்பியுள்ளார். இதேபோல் பாஜகவை சேர்ந்த ஒருவரும் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். அவர்கள் மீது புகார் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வு கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது, நிலைக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலைக்கட்டணம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரப்பபடுகிறது. மேலும், பராமரிப்பு பணிகளை தவிற, மழையின் காரணமாக தமிழகத்தில் எந்த இடத்திலும் மின் விநியோகம் தடைபடவில்லை என்று அவர் கூறினார்.