×

அதிமுக ஆட்சியில் முழு கரும்பு கொடுத்தார்களா?- அமைச்சர் கேள்வி

 

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 10,000 க்கு மேற்பட்ட இலங்கை அகதிகளுக்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதை நாளை மறுநாள் தமிழக முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். பொருட்கள் வாங்க முடியாதவர்கள் வரும் 16ஆம் தேதி பொருட்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் நியாய விலை கடைகளில்  கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தேங்காய் எண்ணெய் நியாயவிலை கடைகளில் கிடைக்க பரிசீலனை செய்யப்பட உள்ளது” என்றார். 

மேலும் ஆறடிக்கு கீழுள்ள கரும்புகளையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், அன்புமணி ராமதாஸ் கடைசியாக விட்ட அறிக்கையில் அதிகாரிகளை வைத்து கரும்பு கொள்முதல் செய்வதை வரவேற்றுள்ளதாகவும், தற்போது குறைந்தபட்சம் ஐந்து அடி கரும்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் முழு கரும்பு கொடுத்தார்களா?  என கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவினர் கரும்பை  வெட்டி கொடுத்தார்கள் எனவும் தெரிவித்தார். நியாயவிலை கடைகளில் ஐரிஸ் நடைமுறையை பொறுத்த வரை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கருவிழி மூலம் பொருட்களை பெற அரசாணை வெளியிடப்பட்டுள்ளதோடு, விரைவில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் கருவிழி மற்றும் பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.