×


தமிழகத்தில் வரும் 9-ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு- அமைச்சர் சக்கரபாணி

 

தமிழகத்தில் வருகிற ஒன்பதாம் தேதி சென்னையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்த அன்றே தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


 
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் திரு.சக்கரபாணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், இருப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  மேலும் பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்கள் அனைத்து கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழக முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்க 80 சதவீத விழுக்காடு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் நூறு சதவீதம் டோக்கன் வழங்கப்படும். வருகிற ஒன்பதாம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை துவக்கி வைத்தவுடன் அன்றைய தினமே தமிழக முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் தரமான பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தரமான பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் இந்த மாத தேவைக்கு அதிகமாகவே குடிமைப் பொருட்கள் இருப்பு உள்ளது. மேலும் தமிழக முழுவதும் 103 திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ள நிலையில் மழையினால் நெல் சேதம் அடையும் நிலை ஏற்படுவதை தடுக்க திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்காக 238 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்துத்து 450 மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் வகையில் மதுரை கப்பலூரில் புதிதாக சேமிப்பு கிட்டங்கி கட்டப்பட்டு வருகிறது. அதற்கான கட்டுமான பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில் விரைவில் முதல்வரால் திறக்கப்பட உள்ளது.

அதிமுக ஆட்சியில் கரும்புக்கு ரூ.30 கொடுக்கப்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சியில் தற்போது 33 ரூபாய் வழங்கப்படுகிறது. இது 10% உயர்வாகும்,  பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்திடவே போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் தேங்காய் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமிழகத்தில் 11 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பதற்கான புதிய கிட்டங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் மழைக்காலத்தில் எந்தவித விவசாயிகளில் நெல்லும் நினையாது. மேலும் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும், நெல்கள் உடனடியாக அந்தந்த அரவை ஆலைக்கு அனுப்புவதற்கு உரிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.இனி விவசாயிகளின் நெல் மழையில் நனைந்து வீணாகவே ஆகாது” என உறுதிபட தெரிவித்தார்