×

“தவறான தகவல்களைப் பெற்று அறிக்கை விடுவது எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்க்கு அழகல்ல”

 

யாரோ கொடுக்கும் தவறான தகவல்களைப் பெற்று அறிக்கை விடுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல என எடப்பாடி பழனிச்சாமிக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழகத்தின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தஞ்சாவூரில் 5000 நெல் மூட்டைகள் மழையால் நனைந்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது, முற்றிலும் தவறான தகவல். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. 

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 12 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டரை லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இறந்து போன, 12 லட்சத்து 50 ஆயிரம் பெயர்களை குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நெல்லுக்காக தஞ்சையில் கட்டப்பட்ட குடோன், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பயன்பாடற்று கிடந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பின், மின் இணைப்பையும் சாலை வசதியையும் ஏற்படுத்தி, அந்த குடோன்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் நெல்லை சேமித்து வைக்க எந்த இடத்திலும் புதிய குடோன்கள் அமைக்கவில்லை. 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் உணவு பொருள்கள் கொள்முதல் செய்வதற்கு திறந்தவெளி டெண்டர் மற்றும் உலகளாவிய டெண்டர் விடப்பட்டு வருகிறது. இதில் தகுதி வாய்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெற்று டெண்டர்கள் எடுத்து வருகின்றன. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இந்த உணவுப் பொருட்கள் துறையில் விடக்கூடிய டெண்டரை பெற்று வந்தன. உணவுத்துறை முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.நீலகி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை உள்பட பல மாவட்டங்களில் சிறு தானியங்கள் வழங்க வேண்டும் என வந்துள்ள கோரிக்கையையடுத்து, அதனை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் கூறினார்.