“ஸ்டாலினுக்கு நடந்தது, அடுத்த தேர்தலில் உதயநிதிக்கும் நடக்கும்”- அமைச்சர் ரமேஷ்
திருச்சியில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்க சென்ற இடத்தில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் பௌலிங் போட, அதை லாவகமாக விளாசினார் தவெக அமைச்சர் ரமேஷ்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “கொளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தனது மகனுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அண்ணா சொல்லிக் கொடுத்தவற்றை சரியாக சொல்லிக்கொடுத்து வளர்த்திருந்தால், இந்த நிலைக்கு ஆளாகி இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஸ்டாலின் கூட எம்எல்ஏ ஆக முடியவில்லை. தந்தைக்கு நடந்த பாடத்தை வைத்துக் கொண்டு உணராமல், உதயநிதி ஆபாசமாகப் பேசுவது, அவதூறாகப் பேசுவது, கீழ்த்தரமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவது என தொடர்ந்து செய்து கொண்டு இருந்தால் ஸ்டாலினுக்கு நடந்தது, அடுத்த தேர்தலில் உதயநிதிக்கும் நடக்கும். அப்பாவே மகனுக்கு நல்லதை சொல்லித்தரலைனா யார்தான் திருத்த முடியும்? ஸ்ரீரங்கம் நில மோசடியில் கைதான ராம்குமார், மாட்டிக்கிட்டதும் நெஞ்சுவலி, அய்யோ அம்மானு கத்துறாங்க.. இதுதான் தி.மு.கவின் Pattern. ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.