"எந்தவிதமான அரசியலும் நடக்காது!" – கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் உறுதி
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் எந்த ஒரு குளறுபடியும், அரசியலும் நடக்காது. உலகமே புகழக்கூடிய வகையில் சிறப்பாக நடைபெறும் என அமைச்சர் ரமேஷ் உறுதி அளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தில் 9000 பாஸ்கள் வழங்க திட்டம். ஆன்லைனில் குலுக்கல் முறையில் கும்பாபிஷேக டோக்கன்கள். கும்பாபிஷேகத்தை மக்கள் காண கோவிலை சுற்றி LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதமான குளறுபடியும், அரசியலும் இங்கு நடக்காது. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களுக்கான திருவிழாவாக சிறப்பாக கொண்டாடுவோம். தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக உரிமை, யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தவெக-வை பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், முதல்வர் விஜய் தலைமையில் நிர்வாகம் சிறப்பாக இயங்குவதாகவும் குறிப்பிட்ட அவர், தேர்தலில் தவெக நிச்சயமாக வெற்றி பெறும். பைலட் முறையில் கோயில் நிலங்கள் தொடர்பான முறைகேடுகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் துறை அமைச்சர், மின்தடை பிரச்சினை சரி செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெளிவாக சொல்லிவிட்டார். தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் மின்வெட்டு கிடையாது. சரி செய்வதற்குள் சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக போராட்டம் செய்கிறார்கள். அதெல்லாம் மக்களிடம் எடுபடாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். முதல்வர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டால், அதில் பல்வேறு அரசு சார்ந்த நிகழ்வுகள் இருக்கும். யார் யார் செல்ல வேண்டும் என்று முதல்வர்தான் முடிவு செய்வார். விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்காக முதல்வர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையெல்லாம் அரசியல் படுத்தி, இதை வைத்துச் சர்ச்சை உண்டாக்கி, அதன் மூலம் அரசியல் செய்பவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் அரசியல் வேலைகள், மக்கள் பணிகளை பார்க்க முடியாது” எனக் கூறினார்.