கோயில்களில் அதிக விலைக்கு பூஜை பொருட்கள் விற்பனை- அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் விற்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியல் வைக்க அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்களில் செயல்படும் பிரசாதக் கடைகள் மீது நீண்ட காலமாக தரக்குறைவு, விலை உயர்வு உள்ளிட்ட புகார்கள் எழுந்து வந்த நிலையில், அமைச்சர் ரமேஷ் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இனி கோவில் வளாகத்திற்குள் தான் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தெளிவான கெடு விதித்துள்ளார். மேலும், வடை, முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்களின் அளவு, விலைப்பட்டியல், தயாரிப்பு தேதி, உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கண்காணிக்க தனி குழு ஒன்றை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் விற்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியல் வைக்க அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று மதுரை கள்ளழகர் கோவிலில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார். அங்கு அதிக விலைக்கு பூஜை பொருட்கள் விற்பதை பார்த்து அறிவுரை வழங்கிய அமைச்சர் ரமேஷ், விலைபட்டியல் தொடர்பாக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப ஆணையருக்கு அறிவுறுத்தினார். மேலும் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கடைகளில் அரசின் விலை பட்டியலை காட்சிப்படுத்தவும் உத்தரவிட்டார்,