"மாணவியிடம் அக்கா ஸ்தானத்தில்தான் அமைச்சர் கீர்த்தனா பேசினார்” - அமைச்சர் ராஜ்மோகன்
அரசுப் பள்ளி ஒன்றிற்கு ஆய்வு செய்யச் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீர்த்தனா, அங்கிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி நடந்துகொண்ட விதம் அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார்.
தனது ஒரு வார கால அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “தவெக கூட்டணி கட்சிகளை ஏவலாள் போல நாங்கள் நடத்துவதில்லை. ஐந்து ஆண்டுகால ஆட்சியின் விளைவே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. காலங்காலமாக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தங்களது தொகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது ஒரு வழக்கமான மரபுதான். இந்தச் சம்பவத்தின்போது அமைச்சர் கீர்த்தனா எந்தவொரு காணொளியையும் எடுக்கவில்லை. ஊடகங்கள் எடுத்த காணொளிதான் தேவையின்றி சர்ச்சையாக்கப்பட்டுவிட்டது. அமைச்சர் கீர்த்தனாவும் ஒரு மாற்றுத் திறனாளியின் மகளாக பிறந்து, தமிழ்வழிக் கல்வியில் படித்து, பின்னர் தனது தனித்திறமையால் நன்றாக ஆங்கிலம் பேசும் அளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்ட ஒரு அரசியல் ஆளுமைதான். எந்தவொரு பள்ளியிலும் மாணவர்களின் ஆங்கிலப் புலமையையோ அல்லது அவர்களது பின்புலத்தையோ அரசியல் காரணங்களுக்காக யாரும் கேட்கக் கூடாது என்பதில் உடன்படு உள்ளது. அந்த மாணவியைப் பார்த்தபோது, தன்னைப் போலவே தமிழ்வழியில் படித்து வரும் ஒருவரைப் பார்த்த உணர்வு ஏற்பட்டதால், முற்றிலும் ஓர் அக்கா ஸ்தானத்தில் இருந்துதான் அமைச்சர் கீர்த்தனா அன்போடு பேசினாரே தவிர, இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பதால் இதனை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என்றார்.