3 சேனல்கள் முடக்கம் அரசியல் காரணமா?- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
சேனல்கள் முடக்கப்பட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம், அரசியல் காரணங்கள் இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24*7, மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் ஆகியவை நீக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் அரசு சார்பில் காரணம் கூறப்படுகிறது. ஆனால் மின்வெட்டு குறித்த செய்திகளை வெளியிட்டதால் முடக்கம் என அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ்களில் பாலிமர், தமிழ் ஜனம், நியூஸ் தமிழ் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம், அரசியல் காரணங்கள் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு என்பதால் எப்போது சரிசெய்ய முடியும் என தெரியவில்லை. அரசு கேபிள்களில் இருந்து மூன்று சேனல்கள் தெரியவில்லை என்பது முழுக்க முழுக்க தொழில்நுட்ப பிரச்சனை தான். நான் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி விட்டேன், விரைவில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும். சன் டிவி, ஜெயா டிவி போன்ற எங்களை அதிகமாக விமர்சனம் செய்யும் சேனல்கள் எல்லாம் தெரிகிறது, இந்த மூன்று சேனல்கள் மட்டும் தெரியவில்லை என விமர்சனம் வைப்பது தவறான ஒன்று” என்றார்.