ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார், பணிகள் எந்த அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், “பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு பள்ளிகள் வரும் நான்காம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளோம். பாரத சாரண சாரணியர் இயக்கம் விரைவில் தொடங்க உள்ளோம். பள்ளி மாணவர்கள் அனைவரும் தன்னை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த இயக்கத்தில் இணைந்தால் ஒழுக்கம், கல்வி, பயிற்சி உள்ளிட்டவை கிடைக்கும், இவை நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக உள்ள ஆசிரியர்களின் காலி பணியிடங்களை முறையாக ஆலோசனைகள் மேற்கொண்டு, வேகமாக,தேர்வு நடத்தி காலி பணியிடங்களை நிரப்புவோம். உடற்பயிற்சி ஆசிரியர்களின் காலி பணியிடங்களை, அடையாளம் காண்டு அதனை நிரப்புவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இந்த காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான ஆய்வு கூட்டம் நடத்தி, அந்த காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகிறோம். விரைவில் அதற்கான ஆய்வு கூட்டம் நடத்தி வெளியிடுவோம்” என்றார்.