“திராவிட கட்சிகளை டெபாசிட் இழக்கச்செய்து ஓட ஓட முதல்வா் விரட்டுவாா்”- அமைச்சர் ராஜ்குமார்
சாதாரண குடும்ப பின்னணி கொண்ட என்னை அமைச்சரவையில் அமரவைத்தவர் முதல்வர் விஜய் என அமைச்சர் ராஜ்குமாா் கூறினார்.
மதுராந்தகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக முதல்வர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில், இதற்காக ஆத்தூர் பகுதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பிரச்சாரம் காரணமாக ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன. மதுராந்தகத்தில் முதல்வர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆனால் ஏராளமான தொண்டர்கள் உள்ளே வர முயன்றதால், அங்கு அமைக்கப்பட்ட தடுப்புகள் தகர்க்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாததால் தற்போது பாஸ் இல்லாதவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரச்சார மேடையில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்குமார், “சாதாரண குடும்ப பின்னணி கொண்ட என்னை அமைச்சரவையில் அமரவைத்தவர் முதல்வர் விஜய். திராவிட கட்சிகள் மக்களுக்கு எதையும் செய்யவில்லை, திராவிட கட்சிகளை டெபாசிட் இழக்கச்செய்து ஓட ஓட முதல்வா் விரட்டுவாா். இந்த தேர்தல் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த தேர்தலிலும் ஒரே தலைவர் தளபதி விஜய் மட்டுமே ” என்றார்.