×

“உதயநிதி முதல்வராவதற்கு அனைத்து தகுதியும் உள்ளது”- ஈபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பின்னர் கோமாபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரியய்யாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதில் கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஒரு இயக்கத்தில் ஒருவரை துணை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அவருக்கான தகுதியை அடிப்படையாகக் கொண்டு அந்த இயக்கம் தான் தேர்ந்தெடுக்குமே தவிர மற்ற எதிர்க்கட்சிகளை கேட்டு ஒரு துணை முதலமைச்சரையோ, அமைச்சரையோ தேர்ந்தெடுப்பது கிடையாது. துணை முதலமைச்சருக்கான அனைத்து தகுதியும் அவருக்கு உண்டு. உடனடியாக அவர் பதவிக்கு வரவில்லை, முதல் முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் மிகச் சிறப்போடு பணியாற்றி அமைச்சராக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றார். நாடாளுமன்றத் தேர்தலிலும், ஈரோடு இடைத்தேர்தல் போன்றவற்றில் எல்லாம் மிகச் சிறப்போடு பணியாற்றி அதற்குப் பிறகு இந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களின் வற்புறுத்தலோடு தான் அவர் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது முதலமைச்சரின் விருப்பமல்ல, இந்த இயக்கத்தினுடைய கோடிக்கணக்கான தொண்டர்களுடைய விருப்பம், அதனை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் பொறுப்பேற்ற உதயநிதி முதல்வராவதற்கு அனைத்து தகுதியும் உள்ளது.

ஒரு இயக்கத்தில் ஒருவர் தன்னை இணைத்து கொள்ள வேண்டுமென்றால் அவர் விரும்பினால் தான் இணைத்துக் கொள்ள முடியுமே தவிர கட்டாயப்படுத்தியோ பிச்சை எடுத்தோ சேர்க்க முடியாது. வேண்டுமென்றால் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சிக்காரர்களை அனுப்பி பிச்சை எடுத்து எத்தனை கோடி பேரை சேர்க்கிறார் என்று பார்ப்போம். சாதனைகளைச் சொல்லி நாங்கள் சேர்க்கின்றோம் யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை” என்றார்.