“வீரமணி வழக்கில் யாருடன் டீலிங் பேசினார் விஜய்? 25 நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?”- ரகுபதி
ஜெம் வீரமணி வழக்கை கைவிடவில்லை உரிய ஆதாரங்களுக்காக காத்திருந்தோம் என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “எங்கள் மீது இல்லாத வீண்பழியை இன்று சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். வீரமணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2025ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி அன்று தன்னார்வலர் ஒருவர் வீடியோவுடன் புகார் அளிக்கிறார். அடுத்த நாளே FIR பதிவு செய்யப்பட்டது. அவர் எங்களுக்கு வேண்டியவராக இருந்தால் ஏன் அடுத்த நாளே FIR பதிவு செய்யப்பட வேண்டும்? ஆனால், அந்த வீடியோவில் வெறும் நிழல் மட்டும்தான் தெரிந்தது. ஆள் யாரென்று தெளிவாக இல்லை. அதனால் தெளிவான ஆதாரம் கிடைக்கும் வரை காத்திருப்போம். அதன் பின் மேல் விசாரணை எடுப்போம் என்றுதான் நீதிமன்றத்தில் தெரிவித்தோம். நாங்கள் ஒன்றும் வழக்கை வாபஸ் வாங்கிவிடவில்லை. வீரமணி தொடர்பான வீடியோவில் காட்சிகள் தெளிவாக இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.. அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த தவெக நிர்வாகி மணிகண்டனை மட்டும் கைது செய்துவிட்டு வழக்கை மூடி மறைத்து யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த அரசு. மேலும் பலரும் இதில் உடந்தையாக இருந்ததாக புகார் வெளியானது. மணிகண்டனை மட்டும் கைது செய்து விட்டுவிட்டார்கள். மேற்கொண்டு இதில் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று விசாரிக்காமல் வழக்கை மூடி யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறது தவெக.
தவெக அரசு அமைந்ததில் இருந்து தமிழகத்தில் இருள் சூழ்ந்து இருக்கிறது. பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லாத சூழல். முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதில் தான் பிசியாக இருக்கிறார். ரீல்ஸ் ஆட்சி தான் நடக்கிறது. ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. வீரமணி வழக்கில் யாருடன் டீலிங் பேசினார் விஜய்? 25 நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.