×

தவெக மாநாட்டால் திமுகவுக்கு பாதிப்பா?- அமைச்சர் ரகுபதி

 

திமுகவின் முன்னோடியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான முரசொலிமாறனின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அவரது பிறந்தநாளை கொண்டாடினர். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மனசாட்சியாக முரசொலி மாறன் செயல்பட்டதாக கூறி முழக்கங்கள் எழுப்பி அவரது புகழை போற்றினர். மேலும் இதில் திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆளுநர் தமிழ்நாட்டில் இருப்பதையே அவர் மறந்து விடுகிறார். தான் பொறுப்பேற்று இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பதை மறந்துவிட்டு அவர் எப்போதும் பேசுவதை விளக்கமாகக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வியில் இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் முன்னேறி இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. அது அவருக்கு புரியாது. அவருக்கு தமிழ் தெரியாது புரியாது. தமிழர்களின் நிலைமை அவருக்கு புரியாது. தமிழ்நாட்டு மாணவர்கள் தான் இன்று அகில இந்திய அளவில் உயர் படிப்பில் சாதித்து வருகின்றனர் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எந்த இடத்திலும் சோதனை வருவது முதலில் தெரியாது. அதனால் அரை பூட்டப்பட்டிருக்கும். அழைத்து வந்து பூட்டை திறக்க வேண்டியது தானே? அதற்கு ஏன் பூட்டை உடைக்க வேண்டும். தற்போது மிரட்டல் படலத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஐ பெரியசாமி வீட்டில் நடந்த சோதனையை போல் இன்னும் எத்தனை சோதனைகள் நடந்தாலும் அந்த மிரட்டலுக்கு திமுக எந்த காலத்திலும் அஞ்சாது. நாங்கள் எங்கள் தேர்தல் பணிகளை சிறப்பாக தொடங்கி விட்டோம் என்பதை இந்தியா அறிந்துள்ளது ஒன்றிய அரசின் உளவுத்துறை திமுகவினர் சிறப்பாக பணி செய்து வருகின்றனர் அவர்களை ஈடு செய்யும் அளவிற்கு யாராலும் முடியாது என்று சொல்லும் அளவிற்கு வாக்காளர்களையே உறுப்பினர்களாக சேர்த்து இன்று தேர்தல் பணியை சிறப்பாக கொண்டு சென்று வருகின்ற இயக்கமாக திமுக கூட்டணி இருக்கிறது. 

சட்டமன்ற விடுதியில் சோதனைக்கு செல்ல வேண்டும் என்றால் சட்டமன்ற செயலாளரின் அனுமதி வேண்டும். அனுமதி இன்றி சென்று அங்கு உள்ள அறைகளை உடைப்பதற்கு அமலாக்க துறைக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும். அனுமதி இல்லாமல் அவர்கள் அத்துமீறுகின்ற பொழுது அதை கண்டிக்கின்ற கடமை திமுக தொண்டர்களுக்கு உண்டு. எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை நாங்கள் கவலைப்படவில்லை. அவர் இன்று பாஜகவின் கொத்தடிமை. அவர் சொல்வதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.  யார் நடத்தும் எந்த மாநாடும் எங்களுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தாது. திராவிட மாடலா ஆட்சியினுடைய இரண்டாம் பாகம் மூன்றாம் பாகமும் தொடரும் பொன்னியின் செல்வனைப் போல தொடர்ந்து கொண்டே இருக்கும். அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்துட்டு போகட்டும். அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது. அவர்களால் வாக்குச்சாவடி முகவர்களையே நியமிக்க தடுமாறுகிறார்கள். அவர்கள் எப்படி தேர்தல் களத்தில் சாதிக்கப் போகிறார்கள். அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை. நாங்கள் போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அசல் வாக்காளர்கள் அசலாக வாக்களித்தாலே போதும். போலி வாக்காளர்கள் எங்களுக்கு தேவையில்லை” என்று தெரிவித்தார்.